பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மளிகை பொருட்கள் விற்பனையை, சென்னையில் துவங்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாநிலம் முழுதும், கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை, அரசு அமல்படுத்தி உள்ளது. இது, நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், அத்தியாவசிய தேவையான காய்கறிகள், பழங்கள் கிடைக்க, அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில், மாநகராட்சி, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு துறைகள் வாயிலாக, இப்பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே, பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறுகலான தெருக்களில், தள்ளுவண்டிகள் வாயிலாக காய்கறிகள் விற்கப்படுவதால், வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், கொரோனா பரவலை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன், 23 மற்றும் 24ம் தேதிகளில், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, வியாபாரம் நடத்தப்பட்டது. அப்போது, பொருட்களை வாங்க, மக்கள் அதிகளவில் திரண்டனர். இதன் பாதிப்பு, வரும் நாட்களில் தெரியவரும். எனவே, ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா பொருட்களுக்கு தேவை ஏற்படும். எனவே, காய்கறிகள், பழங்கள் போன்று, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மளிகை பொருட்களை வாகனங்களில் விற்பனை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தவால்சாவடி, சவுகார்பேட்டை மற்றும் கோயம்பேடு மளிகை மார்க்கெட் வியாபாரிகளை, இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, பொதுமக்கள் வெளியில் நடமாடுவது குறைந்து, சென்னையில் கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளது.