கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களின் பதவி பறிக்கப்படும் என திமுகவை சேர்ந்தவரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரை முருகன் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்தாலும், பல மாவட்டங்களின் இன்னும் தொற்று பாதிப்பு குறையவில்லை. இதனை கட்டுப்படுத்தும் பணியில் அரசும், சுகாதார மையமும் ஈடுபட்டு வருகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் முகாம்களை விரிவுப்படுத்தும் பணியையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் திமுக கட்சி நிர்வாகிகள் தடுப்பூசி ஊசியை செலுத்திக் கொள்ளாவிட்டால், அவர்களது பதவி பறிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
திருப்பூர் நாட்றம்பள்ளியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தபோது, அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இதனை கூறினார். மேலும், அனைவரும் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார். இதனால் 100% உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும் என்றார். எனவே திமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், கிளை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் முன்வந்து மக்களுக்கு முன்னுதாரணமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்லாது, தடுப்பூசி செலுத்திய சான்றிதழையும் திமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களிடம் சமர்பித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். ஏனெனில் தான் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாகவும், தடுப்பூசி செலுத்திக்கொண்டதாலே உயிர் பிழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.