கடலூர்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கொரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சாகமூரி செயல்பட்டு வருகிறார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து நேற்று அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இன்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி முதல் தவணையை அவர் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.