ஊரடங்கிலும் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் இயங்கும்

 


கொரோனா பரவல் குறையாததால் நேற்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு வார காலத்துக்கு இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இதர கடைகளை போலவே, ரேஷன் கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பொதுமக்கள் நலனுக்காக ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் உத்தரவை அரசு பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கு 24-ந் தேதி (நேற்று) முதல் ஒரு வார காலத்துக்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்காக நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்த சூழ்நிலையில், பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் இன்றியமையாப் பண்டங்களாகிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொது வினியோகத் திட்ட பண்டங்களை தொடர்ந்து பெறும் வகையிலும், கொரோனா முதற்கட்ட நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரத்தை இதுவரை பெறாதவர்கள் பெறும் வகையிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழலிலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் 25-ந் தேதி (இன்று) காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை வினியோகம் செயல்படுத்தபட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.


அந்த வகையில், உணவுத்துறைப் பணிகளில் ஈடுபடும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்பட அத்தியாவசியப் பணிகளுக்காக பயணிக்க நேரும் அலுவலர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணத்தொகை தடையின்றி வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை, சீரிய முறையில் எந்தவித தொற்று பாதிப்புமின்றி செயல்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களும் இத்திட்டத்தை உரிய பாதுகாப்பு முறையில் பயன்படுத்தி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் இருந்து பெற்று செல்ல வேண்டும்.

ரேஷன் அட்டை எடுத்து செல்லுங்கள்

பொதுமக்களின் நலன் கருதி இந்த தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும். ரேஷன் கடைக்கு செல்லும் போது அதற்குரிய ஆதாரமாக தவறாமல் தங்களுக்குரிய ரேஷன் அட்டையுடன் செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், பாலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்க்குகள், ஏ.டி.எம். எந்திரங்கள், செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் ரேஷன் கடைகளும் இன்று முதல் செயல்பட இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post