மண்ணச்சநல்லூர் தாசில்தார் முன்னிலையில் திருச்சி நகைக்கடை ஊழியர் உடல் தோண்டி எடுப்பு

 


கொலை செய்து புதைக்கப்பட்ட திருச்சி நகைக்கடை ஊழியர் உடல், தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகை கடையில் ஊழியராக வேலை செய்து வந்தவா் மார்ட்டின் ஜெயராஜ் (வயது42). இவா் புதிய நகைகள் வாங்குவதற்காக கடந்த 8-ந் தேதி வாடகை காரில் சென்னைக்கு சென்றார். சென்னையில் குறிப்பிட்ட ஒரு கடையில் சுமார் 1½ கிலோ நகைகளை வாங்கி விட்டு அதே காரில் திருச்சிக்கு புறப்பட்டார்.

ஆனால் கடை உரிமையாளரிடம் தெரிவித்தபடி அவர் திருச்சிக்கு வந்து சேரவில்லை. அவரது செல்போன் இணைப்பும் ‘சுவிட்ச்- ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த கடையின் உரிமையாளர் மதன் தனது ஊழியர் மார்ட்டின் ஜெயராஜை நகையுடன் மாயமானதாகவும், அவரை கண்டுபிடித்து தாருங்கள் என உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், மார்ட்டின் ஜெயராஜ் சென்ற காரின் டிரைவர் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களான 6 பேர் சேர்ந்து மார்ட்டின் ஜெயராஜை கொலை செய்து அவர் வைத்திருந்த 1½ கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றதும், உடலை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் என்ற கிராமத்தில் ஒரு வாழை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து உறையூர் போலீசார் டிரைவர் பிரசாந்த், கீழக்குறிச்சி பிரசாந்த், நண்பர்கள் அழகியமணவாளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார், பிரவீன், அறிவழகன், அரவிந்த், விக்ரம் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 1½ கிலோ நகைகளும் மீட்கப்பட்டன.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான டிரைவர் பிரசாந்த் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று காலை உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் அழகியமணவாளம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு மார்ட்டின் ஜெயராஜ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினார்கள்.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தாசில்தார் மலர், துணை தாசில்தார் கார்த்திகேயன், கிராம நிர்வாக அதிகாரிகள் கவிதா, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் மார்ட்டின் ஜெயராஜின் உடல் புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது மார்ட்டின் ஜெயராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினரால் அந்த இடத்தில் வைத்தே மார்ட்டின் ஜெயராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மார்ட்டின் ஜெயராஜின் உடல் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை நடைபெற்ற இடத்தில் கிராம மக்கள் ஏராளமானவர்கள் கூடி நின்றனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்


Post a Comment

Previous Post Next Post