மும்பை,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. நேற்று காலை வெளியான தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 3.48 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 4,025 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. ஆனால், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு முகாம்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல்நலக்குறைவால் படுக்கை மற்றும் சக்கர நாற்காலியில் இருப்போருக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போட உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் 2 பேர் மராட்டிய மாநிலம் மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி திபன்கர் தத் மற்றும் நீதிபதி குல்கர்னி அடங்கிய அமர்வு, மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்த முடியாவதவர்களுக்கு முன்கூட்டியே வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கினால் என்ன? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மூன்று வாரங்களுக்கு மேலாக இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை. அரசு எதாவது முடிவு எடுக்க வேண்டும். முன்கூட்டியே நாம் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கியிருந்தால் உயிரிழந்த பிரபல நபர்கள் உள்பட பல மூத்த குடிமக்களின் உயிரை நாம் காப்பாற்றி இருக்கலாம்’ என்றனர்.
மேலும், இது தொடர்பாக பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை மே 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
Tags:
இந்தியா