30 நாட்கள் பரோல் கேட்டு நளினி, முருகன் முதல்-அமைச்சருக்கு கடிதம்

 


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன்-மனைவி இருவரும் 29 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, முருகன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நளினி, முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும்படி கடிதம் வழங்கி உள்ளனர்.

நளினி எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் உள்ள தனது தாயார் பத்மா (வயது 81) முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் அருகில் இருந்து கவனித்து கொள்ளவும், இலங்கை நாட்டில் வசித்த தனது மாமனாரும், முருகனின் தந்தையுமான வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆகிறது. அவருக்கு சடங்குகள் செய்ய வேண்டி உள்ளது. எனவே எனக்கும், கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று முருகனின் எழுதியுள்ள கடிதத்தில், தந்தை வெற்றிவேல் கடந்தாண்டு இறந்தபோது இறுதிசடங்கு செய்வதற்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை. தற்போது தந்தை இறந்து ஓராண்டுகள் ஆகிறது. எனவே அவருக்கு சடங்குகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக நளினி, முருகனின் வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

நளினி, முருகன் வழங்கிய கடிதம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு தபால் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது என்று ஜெயில் சூப்பிரண்டு தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post